×

பாஜவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்: சொந்த தொகுதியிலேயே போட்டியிட ‘சீட்’; அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவதால் பாஜ அதிர்ச்சி

பெங்களூரு: பாஜவில் இருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹுப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் போட்டியிட உடனடியாக சீட் தரப்பட்டது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். கடந்த 1980ம் ஆண்டுகளில் வட கர்நாடக பகுதியில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உழைத்தவர்.

கடந்த 1999, 2004, 2008, 2013, 2018 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு முதல்வராக பதவியேற்று ஓராண்டு காலம் இருந்தார். மாநில சட்ட பேரவை தேர்தலில் பாஜ சார்பில் 7வது முறையாக போட்டியிட விரும்பி விண்ணப்பித்தார். ஆனால் பாஜ தலைமை வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தது. இதனால் தனது பேரவை உறுப்பினர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஹுப்பள்ளியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்த ஷெட்டர். முன்னாள் அமைச்சர் சாமனூர் சிவசங்கரப்பாவின் பண்ணை தோட்டம் சென்றார்.

அன்று இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12.45 மணி வரை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா, மாநில தலைவர் டி.கே. சிவகுமார், எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள் எம்.பி. பாட்டீல், ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் ஷெட்டரிடம் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பாஜவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று காலை 9.10 மணிக்கு பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகம் வந்தார். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சி சால்வை அணிவித்தும், பூச்செண்டு மற்றும் கட்சி கொடி கொடுத்ததின் மூலம் சேர்த்து கொண்டனர்.

கட்சி சார்பில் அவரது சொந்த தொகுதியான ஹுப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கான பி பாரத்தை டி.கே.சிவகுமார் வழங்கினார். கட்சியில் சேர்ந்த பின், காங்கிரஸ் கொள்கை, சிந்தாந்தங்களை முழு மனதுடன் ஏற்று கொண்டு சேர்ந்துள்ளதாக ஷெட்டர் தெரிவித்தார். பாஜவில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். தற்போது, முன்னாள் முதல்வரும் லிங்காயத் சமூக முக்கிய பிரமுகருமான ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தது பாஜவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கண்ணீர் விட்ட மனைவி: பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின் ஜெகதீஷ்ஷெட்டர் வீட்டிற்கு சென்றார். அவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அவரின் மனைவி ஷில்பா, கணவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதார். “என் கணவரின் அரசியல் வாழ்வு முடிந்து விடும் என்று நினைத்தேன். காங்கிரஸ் மூலம் உயிர் கிடைத்துள்ளது” என ஷில்பா கூறினார்.

  • பாஜ 3வது பட்டியல்
    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பா.ஜ நேற்று வெளியிட்டது. இதில் ஜெகதீஷ்ஷெட்டர் போட்டியிடும் ஹுப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி வேட்பாளராக மகேஷ்தெங்கினகாய் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 தொகுதிக்கு பாஜ வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

The post பாஜவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்: சொந்த தொகுதியிலேயே போட்டியிட ‘சீட்’; அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவதால் பாஜ அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Former ,Karnataka ,Jekadish Shetter ,Baja ,Congress ,SEAT ,Bengaluru ,chief leader ,Jekadesh Shetter ,Malligarjuna Karke ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்